சிறையில் தற்கொலை செய்துகொண்ட கைதி பற்றி பரபரப்பு தகவல்கள்

உடுப்பி சிறையில் தற்கொலை செய்துகொண்ட கைதி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-12-12 21:00 GMT

மங்களூரு:-

கைதி தற்கொலை

உடுப்பி மாவட்டம் இரியடுக்காவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சதானந்தா என்பவரும் இரியடுக்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில், கழிவறைக்கு சென்ற சதானந்தா, அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் சிறை காவலர்கள், சதானந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா சிறைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரபரப்பு தகவல்கள்

இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட கைதி சதானந்தா பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சதானந்தா, கார்கலாவில் நில அளவையராக வேலை பார்த்து வந்தார். அவர் ஊழலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க தான் இறந்தது போல நாடகமாட சதானந்தா முடிவு செய்தார். அதன்படி அவர் தனது தோழி ஒருவருடன் சேர்ந்து பைந்தூரை சேர்ந்த ஆனந்த் என்பவரை கொலை செய்து காரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். மேலும் கார் தீவிபத்தில் தான் இறந்ததாக தோழியை வைத்து தயானந்த் நாடகமாடி உள்ளார். ஆனாலும் சதானந்தாவின் சதி திட்டத்தை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து ஆனந்தை கொலை செய்து உடலை எரித்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தான் அவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்