காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலை

காஷ்மீரில் சமீப நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

Update: 2024-07-28 23:09 GMT

ஜம்மு,

காஷ்மீரில் சமீப நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 50 நாட்களில் மட்டும் 15 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 2 அதிகாரிகள் உள்பட 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இதைப்போல 9 புனித யாத்திரை பக்தர்களும் உயிரிழந்து உள்ளனர். மேலும் 58 பேர் காயம் அடைந்தனர். இதனால் காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இப்படி அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான பூஞ்சின், சலோத்ரி-மங்க்னார் பகுதிக்கு அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்தகவல் கிடைத்தன.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அந்த பகுதியை சல்லடை போட்டு பாதுகாப்பு படையினர் தேடினர். ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் சிறப்பு நடவடிக்கைக்குழு என பல்வேறு துறைகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர் இந்த பணிகளை மேற்கொண்டனர். இந்த தேடுதல் வேட்டை மாலையிலும் நீடித்ததாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இதைப்போல ரியாசி மாவட்டத்தின் போனி அருகே உள்ள தடோயா பகுதியில் 2 மர்ம நபர்களை பார்த்ததாக பெண் ஒருவர் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த பணிகளும் நீடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த 2 சம்பவங்களை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தங்கள் பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் உடனே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு மக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

மர்ம நபர்களின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் காஷ்மீர் எல்லை முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற பல தேடுதல் வேட்டை நிகழ்வுகள் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்