அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி இல்லத்தில் பலத்த பாதுகாப்பு

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்-மந்திரி மாளிகைக்கு வர உள்ளனர்.

Update: 2024-01-20 07:04 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஜனவரி 16 முதல் 20-ந்தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு 20-ம் தேதி தனது வீட்டில் வைத்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தார்.

அதன்படி இன்று மதியம் முதல்-மந்திரியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்வர் மாளிகைக்கு வர உள்ளனர். இதையடுத்து முதல்வரின் இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது, பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் வலியுறுத்தி அமலாக்கத்துறை சார்பில், தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குனர் ஜெனரல் மற்றும் ராஞ்சி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் முதல்வரின் வீடு மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் மண்டல அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் முதல்வர் இல்லத்திற்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், விசாரணை முடியும் வரை முதல்வர் இல்லம் அருகே போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்