கேரளாவில் செப்டம்பர் மாதம் முதல் அரசு பஸ்கள், கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயம்

மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும்.

Update: 2023-06-10 00:15 GMT

திருவனந்தபுரம், 

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி ஆன்றனி ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும். அதன்படி கேரளாவில் இலகுரக வாகனங்களில் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்கும் வகையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ்கள் உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அணிய இதுவரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் கேரள அரசுபஸ் உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே, சரக்கு லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களிலும் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணியோ, கண்டக்டரோ, கிளீனரோ கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பஸ் உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் சீரமைப்பதற்காக செப்டம்பர் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களில் இருந்து கேரளா வருகிற அரசு பஸ் உள்பட வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்