கோழிக்கோடு: கடல் நீர் உள்வாங்கியதால் சுனாமி அச்சம் நிலவிய நிலையில் இயல்பு நிலை திரும்பியது!

கடல் நீர் உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள்வாங்கி இருந்தது.

Update: 2022-10-31 04:31 GMT

கோழிக்கோடு,

சுனாமி காலத்திற்கு பிறகு அடிக்கடி கடல் நீர் உள் வாங்குவதும், சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை. இங்கு பலரும் சுற்றுலாவாக வந்து செல்வதுண்டு.

நேற்று முன்தினம் மாலை இந்த கடற்கரைக்கு வந்தவர்கள், கடல் நீர் உள் வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள் வாங்கி இருந்தது. இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பீதியடைந்தனர்.

ஆனால் இதனை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மறுத்தது. அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. எனவே கடல் நீர் உள்வாங்கியது குறித்து கவலைப்படத் தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

கடல் நீர் உள் வாங்கி இருப்பதை காண, மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த பகுதிக்கு மக்கள் செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினர்.

உள் வாங்கிய கடல் நீர் இரட்டிப்பு வீரியத்துடன் மீண்டும் வரக்கூடும் என்றும் இது ஆபத்தானது என்று போலீசார் எச்சரித்து மக்களை திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில், நேற்று கடல் நீர் இயல்பு நிலை திரும்பியது.கடல் நீர் உள் வாங்கிய பின்னர், அங்கு அதிக எண்ணிக்கையிலான மீன்கள் கரை ஒதுங்கலாம் என்று எண்ணி ஏராளமான மக்கள் கோழிக்கோடு கடற்கரைக்கு வந்து, கரை ஒதுங்கிய மீன்களை பிடித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்