சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்குகள் ஆய்வு - வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கிக்கணக்குகள் ஆய்வு செய்யப்படுவதாகவும், யாரேனும் வரி ஏய்ப்பு செய்திருந்தால் அவர்கள் மீது கருப்பு பண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Update: 2023-10-12 02:25 GMT

புதுடெல்லி,

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக இருப்பவர் நிதின் குப்தா. சமீபத்தில் இவர் பதவி நீட்டிப்பு பெற்றிருந்தார். இந்த நிலையில், நிதின் குப்தா ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வைப்புகள் பற்றி தெரிவித்து உள்ளார். இந்திய வருமான வரித்துறை, சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்."

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

சுவிஸ் வங்கிக்கும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்ற உடன்படிக்கை உள்ளது. இதன்படி இந்தியாவுடனான முதல் தகவல் பரிமாற்றம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. வருடாந்திர தகவல் பரிமாற்றமானது, வரி செலுத்துவோர் வெளிநாடுகளில் உள்ள தங்கள் நிதிக்கணக்குகளை தங்களது வரிக்கணக்குகளில் சரியாக அறிவித்துள்ளதா? என்பதை சரிபார்க்க அனுமதிக்கிறது. இந்த வகையில் தற்போது 5-வது முறையாக தகவல் பரிமாற்றம் கிடைத்துள்ளது.

இதன்படி சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய அமைப்புகளின் கணக்கு விவரங்கள் எங்களுக்கு வந்துள்ளன. இந்த கணக்குகள் ஆய்வு செய்யப்படும். அதில் வரி ஏய்ப்பு ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கருப்பு பண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவிட்சர்லாந்து 104 நாடுகளுடன் கிட்டத்தட்ட 36 லட்சம் நிதிக் கணக்குகளின் விவரங்களை பகிர்ந்துள்ளது. இந்தியர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருந்து, அதனை வருமான வரித்துறைக்கு தெரிவிக்காமல் வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அத்தகைய நபர்களுக்கு எதிராக கருப்பு பண சட்டத்தின் கீழ் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்