நாடு முழுவதும் 100 பேரிடம் ஆசை காட்டி மோசடி; டெல்லியில் நைஜீரிய நாட்டினர் கைது

டெல்லியில் விலையுயர்ந்த பரிசு பொருட்களை தருகிறோம் என கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-08 22:07 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மாளவியா நகரை சேர்ந்த பெண் ஒருவரை பேஸ்புக் வழியே புரூனோ ஜார்ஜ் என்பவர் கடந்த ஏப்ரலில் தொடர்பு கொண்டுள்ளார். பின்பு அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் வழியே சாட்டிங் செய்தனர்.

ஒரு வாரத்திற்கு பின், பெண்ணிடம் அந்த நபர், இங்கிலாந்தில் இருந்து பரிசு பொருள் ஒன்றை அனுப்பி இருக்கிறேன் என கூறியுள்ளார்.

பின்னர், மற்றொரு பெண், இந்த பெண்ணை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், மும்பை விமான நிலையத்தில் சுங்க இலாகாவிடம் அந்த பரிசு பொருள் சிக்கி கொண்டது என கூறியுள்ளார்.

அதில், ரூ.62 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் மொபைல் போன்கள் உள்ளன என கூறி, உடனடியாக ரூ.90 ஆயிரம் பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். இல்லையெனில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்ணை மிரட்டியுள்ளார்.

வெளிநாட்டு கரன்சியாக உள்ளது என்றும், இந்திய மதிப்புக்கு அவற்றை மாற்றி தருவோம் என பெண்ணிடம் கூறப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு முறை அந்த பெண்ணிடம் இருந்து மொத்தம் ரூ.6.33 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். அந்த பணம் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்பின்னரே இந்த மோசடி பற்றி அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இதுபற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவானது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர்.

அவர்கள் எல்வின் வாச்சி, சுக்வுமா ஹைசன்ட் உக்வா, மார்டின் ஒனியெகா மற்றும் சிரில் பியோக்வெரே என அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3 லேப்டாப்புகள், 13 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள், வைபை உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் இந்தியா முழுவதும் இதுபோன்று 100 பேரிடம் மோசடி செய்த அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்