எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீட்டிற்கு மந்திரிசபை ஒப்புதல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மடாதிபதிகள் நன்றி

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீட்டிற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை, எஸ்.சி. எஸ்.டி. சமூகங்களின் மடாதிபதிகள் சந்தித்து நன்றி கூறினர்.

Update: 2022-10-08 18:45 GMT

பெங்களூரு:

மந்திரிசபை ஒப்புதல்

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர் (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் கர்நாடக மந்திரிசபை சிறப்பு கூட்டம் நேற்று கூடியது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் கூடுதல் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன்பின்னர் மந்திரிசபை கூட்டம் குறித்து சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஆதிதிராவிட (எஸ்.சி.) மக்களுக்கான கூடுதல் இடஒதுக்கீடு 2 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது அந்த மக்களுக்கான இடஒதுக்கீடு 15-ல் இருந்து 17 ஆக உயர்த்தப்படுகிறது. பழங்குடியின (எஸ்.டி.) மக்களுக்கு இடஒதுக்கீடு 4 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த மக்களுக்கு இடஒதுக்கீடு 3-ல் இருந்து 7 ஆக உயர்ந்து உள்ளது. இந்த கூடுதல் இடஒதுக்கீட்டிற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.

அறிவியல்பூர்வமான அறிக்கை

கூடுதல் இடஒதுக்கீடு தொடர்பாக பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இடஒதுக்கீடு தொடர்பான நாகமோகன்தாஸ் அறிக்கையை தாக்கல் செய்ய சட்ட மந்திரி தலைமையில் துணை குழு அமைக்கப்பட்டு இருந்தது. கூடுதல் இடஒதுக்கீடு தொடர்பான அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும். எஸ்.சி., எஸ்.டி. மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது. இந்த கூடுதல் இடஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி. மக்களின் கல்வி, அதிகாரத்தை எளிதாக்கும்.

அந்த சமூகங்களை புறக்கணிக்க கூடாது. இன்னும் சில சமூகங்கள் தங்களுக்கும் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. எங்கள் முன்பு உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம். நாகமோகன்தாசின் அறிக்கை அறிவியல்பூர்வமாக இருந்ததால் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கிடைத்து உள்ளது. வேறு சமூகங்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து நாங்கள் மந்திரிசபை கூட்டத்தில் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இந்த நிலையில் எஸ்.சி. எஸ்.டி.மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கிடைத்து உள்ளதற்கு மந்திரிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மேலும் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தி வரும் மடாதிபதியை சந்தித்து மந்திரிகள் அசோக், ஸ்ரீராமுலு ஆகியோர் கூடுதல் இடஒதுக்கீடு குறித்து தெரிவித்து இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

மேலும் சில மடாதிபதிகள் பசவராஜ் பொம்மையை சந்தித்து நன்றி கூறினர். கூடுதல் இடஒதுக்கீட்டிற்கு வரவேற்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் எஸ்.சி., எஸ்.டி.மக்கள் இனிப்பு வழங்கினர். மேலும் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்