இ.வி.எம். இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர் கோரலாம்... ஆனால் ஒரு நிபந்தனை- சுப்ரீம் கோர்ட்டு

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள், சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update: 2024-04-26 08:32 GMT

புதுடெல்லி,

வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன.

2019-ல் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்த நிலையில், விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேநேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு மற்றொரு உத்தரவு பிறப்பித்தது. அதில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களை பொருத்திய பிறகு அதனை சீல் வைத்து பாதுகாக்க வேண்டும். சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, குறைந்த பட்சம் 45 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.

அடுத்ததாக, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் . சீல் வைக்கப்பட்ட இயந்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து சரிபார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இயந்திரத்தை சரிபார்க்க கோரிக்கை வைத்த வேட்பாளரே முழு செலவையும் ஏற்க வேண்டும். இயந்திரம் பழுதடைந்தது உறுதி செய்யப்பட்டால், வேட்பாளரின் செலவுத்தொகை திருப்பி தரப்படும்" என்ற நிபந்தனையை விதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்