71 வயது தாத்தாவின் பாசப் போராட்டம் வெற்றி! பேரக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைப்பு; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

முன்னதாக அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு அதன் அத்தையிடம் இருந்தது.;

Update:2022-06-09 16:29 IST

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாழ்ந்து வரும் 5 வயது சிறுவன், கடந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோரை காவு வாங்கிய கொரோனா தொற்றுநோயின் 2வது அலையில், தனது பெற்றோரை இழந்துவிட்டான்.

அதன்பின்னர், அந்த சிறுவனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு, அவனுடைய தாய்வழி அத்தைக்கு குஜராத் ஐகோர்ட்டால் வழங்கப்பட்டது. 46 வயதான சிறுவனின் அத்தைக்கு மத்திய அரசு வேலை இருந்தது, மேலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


ஆனால், குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் பென்ஷன் பணத்தில் தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதனை காரணம் காட்டி, குஜராத் ஐகோர்ட்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த அந்த 5 வயது குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அத்தையிடம் ஒப்படைத்தது.

இந்த நிலையில், இதனை எதிர்த்து, சிறுவனின் தாத்தாவான 71 வயதான சுவாமிநாதன் குஞ்சு ஆச்சார்யா மற்றும் அவருடைய 63 வயது மனைவியுடன் சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது,

நமது சமுதாயத்தில், ஒரு குழந்தையின் தந்தைவழி தாத்தா-பாட்டி, எப்போதுமே தங்கள் பேரக்குழந்தைகளை சிறந்த முறையில் கவனித்துக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி பேரக்குழந்தையுடன் அதிகம் இணைந்திருப்பதால், குழந்தையின் தாய்வழி அத்தையுடன் ஒப்பிடும்போது பேரக்குழந்தைகளின் காவலுக்கு அவர்கள் மிகவும் தகுதியானவர்கள்.

அதேசமயம், தாய்வழி அத்தை தனது வசதிக்கேற்ப குழந்தையைச் சந்திக்கும் உரிமை உள்ளது. குழந்தையின் தாத்தா பாட்டியின் வருமானத்தை ஒரு அளவுகோலாக வைத்துக்கொண்டு, குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அவர்களுக்கு வழங்காமல் மறுக்க முடியாது. மேலும் இரு தரப்பும் மனக்கசப்பை விட்டுவிட்டு குழந்தையின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தவும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்