பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.15¼ லட்சம் மோசடி; மர்மநபருக்கு வலைவீச்சு
பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.15¼ லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
மங்களூரு;
பரிசு விழுந்ததாக கூறி...
உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றின் பெயரில் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை வாங்கி பூர்ணிமா பிரித்து பார்த்துள்ளார். அப்போது அந்த கடிதத்தில் தங்களுக்கு பரிசு விழுந்து இருப்பதாகவும், அந்த பரிசை பெற இந்த செல்போன் நம்பரை தொடர்புகொண்டு பேசும்படியும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தன்னை ஆனந்த் என அறிமுகம் செய்து கொண்டதுடன், உங்களுக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் கூறினார். மேலும் அதனை அனுப்பி வைக்க அரசுக்கு வரி கட்ட தான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
ரூ.15.33 லட்சம் மோசடி
இதனை நம்பிய பூர்ணிமா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகாக ரூ.15 லட்சத்து 33 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பூர்ணிமாவுக்கு பரிசு பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அந்த செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
அப்போது தான் மர்மநபர், பரிசு விழுந்திருப்பதாக கூறி ரூ.15.33 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடுப்பி சைபர் கிரைம் போலீசில் பூர்ணிமா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.