பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.10½ லட்சம் மோசடி
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.10½ லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.
மங்களூரு-
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.10½ லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது30). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், சுபாஷ் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்ய முடிவு செய்தார். அதன்படி சமூக வலைதளத்தில் பகுதி நேர வேலையை தேடினார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதில், வீட்டில் இருந்தே பகுதி நேர வேலை பார்க்கலாம் என இருந்தது. இதையடுத்து அதில் இருந்த லிங்க்கில் சுபாஷ் சென்றார். அதில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் அவர் கூறினார். இதையடுத்து சுபாசின் செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.
வங்கி கணக்கிற்கு
அதில், பகுதி நேர வேலைக்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், 40 நாட்களுக்குள் வேலை வாங்கி தரவில்லை என்றால் பணத்தை திரும்ப தருவதாகவும் கூறினார். இதனை சுபாஷ் நம்பியுள்ளார். இதையடுத்து மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ. 3 லட்சத்து 38 ஆயிரத்து 96 சுபாஷ் அனுப்பி உள்ளார்.
ஆனால், 40 நாட்கள் ஆகியும் மர்மநபர் சுபாசிற்கு பகுதி நேர வேலை வாங்கிதரவில்லை. இதையடுத்து மர்மநபரை அவர் தொடர்பு கொண்டார். அப்போது அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை சுபாஷ் உணர்ந்தார்.
தொழில் அதிபர்
இதேப்போல் மங்களூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). இவரது செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், தான் தனியார் நிறுவனத்தில் மேலாளர் எனவும், எங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறினார்.
இதனை நம்பிய சுரேஷ், மர்மநபர் வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ. 10 லட்சத்து 52 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். ஆனால் மர்மநபர் கூறிய பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை. இந்த 2 மோசடி சம்பவங்கள் குறித்து மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களையும் தேடி வருகிறார்கள்.