டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்வு: ஜனாதிபதியின் ஒப்புதல்
டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது.;
புதுடெல்லி,
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு கோரி ஜனாதிபதிவுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. அதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் 66 சதவீத சம்பள உயர்வு பெறுகிறார்கள்.
இதுவரை டெல்லி எம்.எல்.ஏக்கள் மாத சம்பளமாக ரூ.54 ஆயிரம் பெற்று வருகிறார்கள். இனி ஊதிய உயர்வுடன் ரூ.90 ஆயிரம் பெற உள்ளனர். அதற்கேற்ப அவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் இதர படி பலன்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. தொகுதி உதவித் தொகை, டெலிபோன் படி, பயணப்படி, செயலக பணப்பலன் என பல்வேறு படிகளும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளன.
அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.7 லட்சம் வரை ஊதிய உயர்வு கிடைக்கப்போகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்திருப்பதாக சட்டமன்ற விவகாரத்துறை தற்போது அறிவிப்பை வெளியிட்டு உள்ளது