சபரிமலை மகரவிளக்கு பூஜை; அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.;

Update:2023-01-07 14:38 IST

திருவனந்தபுரம்,

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின், அய்யப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடந்தது. அதனை தொடர்ந்து நடை அடைக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 30-ந்தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தற்போது தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்து அய்யப்பனை தரிசனம் செய்கின்றனர்.

இதனிடையே சபரிமலைக்கு வருபவர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு ஸ்பாட் புக்கிங் மூலம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் அங்கு சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வரும் 11-ந்தேதி இரவு எருமேலியில் பேட்டைத்துள்ளல் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும் என்றும், ஜனவரி 19-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சபரிமலைக்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்