சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு...!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை திறக்கப்படுகிறது.

Update: 2022-10-16 12:24 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் 18-ம் தேதி, அடுத்த மண்டல காலம் முதல் ஒருவருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட 18 மேல் சாந்திகளின் பெயர்களை வெள்ளி கோப்பையில் வைத்து பந்தளம் அரண்மனையில் இருந்து வரும் சிறுவரான கிருத்திகேஷ் வர்ம சபரிமலை மூலவர் கோவிலுக்குரிய மேல் சாந்தியையும் மற்றும் பௌர்ணமி வர்மா மாளிகை புரம் தேவி கோவிலுக்குரிய மேல் சாந்தியையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர்.

அதன் பின்னர் மன்னர் சித்திரை திருநாள்பிறந்த நாளை ஒட்டி 24-ம் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி 5 மணிக்கு நடை திறக்கும் என்றும் சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்