ஆளுங்கட்சியின் "ரப்பர் ஸ்டாம்ப்" ஜனாதிபதியால் ஆபத்தில் உள்ள அரசியலமைப்பை காப்பாற்ற முடியாது - யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு

அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் அவசரநிலைக்கு எதிராக போராடி சிறை சென்றார்கள். இன்று அவர்களது கட்சியால்(பாஜக) நெருக்கடி நிலை உள்ளது என்று சின்ஹா கூறினார்.

Update: 2022-07-08 14:09 GMT

காந்திநகர்,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். மறுமுனையில், எதிர்க்கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா களம் காணுகிறார்.

ஜூலை 18 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற யஷ்வந்த் சின்ஹா அங்கு சென்று இருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் நாட்டில் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. மேலும் "ரப்பர் ஸ்டாம்ப்" ஜனாதிபதி, அரசியலமைப்பைக் ஒருபோதும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டார்.

ஒரு பழங்குடியினருக்கு (திரவுபதி முர்மு) நாட்டின் உயர் பதவி கிடைப்பதால் இந்தியாவில் உள்ள பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மாற்ற முடியாது. யார் எந்த ஜாதி, மதம் என்பது முக்கியமல்ல. எந்த சித்தாந்தத்தை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

எனக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திரவுபதி முர்முவுக்கும் இடையேயான போட்டி அடுத்த ஜனாதிபதி யார் என்பதில் மட்டும் இல்லை. ஜனாதிபதி ஆன பிறகு அந்த நபர் அரசியலமைப்பைக் காப்பாற்ற தனது உரிமைகளைப் பயன்படுத்துவாரா என்பது பற்றியது.

இந்த போர் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையே உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னராக ஆறு ஆண்டுகள் திரவுபதி முர்மு இருந்தபோதிலும், அது அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையை மாற்றவில்லை.

இன்று, அரசியலமைப்பு விழுமியங்களும், பத்திரிகைகள் உட்பட ஜனநாயக நிறுவனங்களும் ஆபத்தில் உள்ளன.

நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது. எல் கே அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் ஒருமுறை அவசரநிலைக்கு எதிராக (1975 மற்றும் 1977 க்கு இடையில்) போராடினர். அதற்காக சிறை சென்றார்கள்.

இன்று அவர்களது சொந்தக் கட்சியே (பாஜக) நாட்டில் நெருக்கடி நிலையை விதித்துள்ளது. இது நகைப்புக்குரியது.

இரண்டு கொலைகள் நடந்தன. நான் உட்பட அனைவரும் கண்டித்தோம். ஆனால் பிரதமரோ உள்துறை மந்திரியோ (அமித் ஷா) ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தேர்தலின் போது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, இதுபோன்ற பிரச்சினைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதனால் தான் அவர்கள் வேண்டுமென்றே மவுனம் சாதிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்