டிரம்பின் இந்திய வருகையின் போது அரசு செய்த மொத்த செலவு என்ன?
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் 2020ம் ஆண்டு இந்தியப் பயணத்திற்காக மத்திய அரசு எவ்வளவு செலவழித்தது என்ற விவரம் ஆர்டிஐயில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் பல உயர் அதிகாரிகளுடன் 2020ம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் 25 வரை இந்தியா வந்திருந்தார்.அப்போது டிரம்ப் அகமதாபாத், ஆக்ரா மற்றும் புதுடெல்லிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், மிஷால் பத்தேனா என்பவர் தகவலறியும் உரிமை சட்டம்(ஆர் டி ஐ) "அதிபர் டிரம்பின் வருகையின் போது இந்திய அரசு செய்த மொத்த செலவுகள் என்ன?" என்று வினவியிருந்தார்.
இதனையடுத்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 2020ம் ஆண்டு இந்தியப் பயணத்திற்காக அரசாங்கம் எவ்வளவு செலவழித்தது என்ற விவரம் ஆர் டி ஐ மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 24, 2020 அன்று விண்ணப்பத்தை தாக்கல் செய்த மிஷால் பத்தேனாவுக்கு, எந்த பதிலும் வரவில்லை. அதைத் தொடர்ந்து அவர் முதல் மேல்முறையீட்டை தாக்கல் செய்து பின்னர் ஆணையத்தை அணுகினார். இந்த நிலையில், இப்போது ஆர் டி ஐ மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 36 மணி நேர இந்திய பயணத்திற்கான செலவு ரூ.38 லட்சம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் அவருக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் அடக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.