கர்நாடகத்தில் தொழில்துறையில் 35 திட்டங்களுக்கு ரூ.1,747 கோடி நிதி ஒதுக்கீடு; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்

கர்நாடகத்தில் தொழில்துறையில் 35 திட்டங்களுக்கு ரூ.1,747 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-22 18:45 GMT

பெங்களூரு:

மந்திரி தலைமையில் ஆலோசனை

பெங்களூருவில் நேற்று கர்நாடக தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது குறித்து மந்திரி முருகேஷ் நிரானி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்துறையை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக தொழில்துறையில் 35 திட்டங்களை நிறைவேற்றுவது, அதற்கான நிதியை ஒதுக்குவது பற்றியும் மந்திரி முருகேஷ் நிரானி அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

அப்போது மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும் 35 திட்டங்களுக்கு ரூ.1,747 கோடியை ஒதுக்கீடு செய்வதும் என்றும், அந்த நிதியை ஒதுக்குவதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. பின்னர் மந்திரி முருகேஷ் நிரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ரூ.1,747 கோடி ஒதுக்கீடு

கர்நாடகத்தில் தொழில்துறையில் 35 திட்டங்களை செயல்படுவதற்காக ரூ.1,747 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 4,904 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.50 கோடி மதிப்பிலான முக்கிய 8 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் ரூ.949 கோடி முதலீடு கிடைத்திருப்பதுடன், 2,461 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ரூ.15 கோடி முதல் ரூ.50 கோடி வரையிலான 25 புதிய திட்டங்களுக்கு ரூ.567 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொழில்துறையை மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறையின் முதன்மை செயலளர் ரமணரெட்டி, வணிக மற்றும் சிறுத்தொழில்துறை கமிஷனர் குஞ்சுன் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்