போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனை துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளை

சிக்பள்ளாப்பூரில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகனை துப்பாக்கியால் சுட்டு, குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-11-10 22:01 GMT

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூரில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகனை துப்பாக்கியால் சுட்டு, குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.

உதவி சப்-இன்ஸ்பெக்டர்

சிக்பள்ளாப்பூர் தாலுகா பெரேசந்திரா டவுனை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் பாகேப்பள்ளி போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாராயணசாமி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் நாராயணசாமி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமியின் மகன் சரத் கொள்ளையர்களை தடுக்க முயன்றார்.

துப்பாக்கியால் சுட்டனர்

அப்போது அவரை தாக்கிய மர்ம நபர்கள், துப்பாக்கியால் 3 முறை சுட்டனர். அதில், சரத்தின் கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்தது. வலி தாங்க முடியாமல் துடித்த சரத்தின் அலறல் சத்தம் கேட்டு அவரின் மனைவி மற்றும் குடும்பத்தார் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமியை மர்ம நபர்கள் தாக்கினார்கள். பின்னர் நாராயணசாமி, அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோரை சரமாரியாக தாக்கி கை,கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் சரத்தை மீட்டு சிகிச்சைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்த பெரேசந்திரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் அந்த காட்சிகளை பதிவு செய்யும் டிவைசரை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

பரபரப்பு

கொள்ளைபோன தங்க நகைகள், பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி பெரேசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்