கர்நாடகத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சீறி பாய்கிறது

கர்நாடகத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்து செல்கிறது. கரையோர மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-07-24 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அணைகளும் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இந்த மாத தொடக்கத்தில் மாநிலத்தில் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. ஆனால் அதன்பிறகு 10 நாட்களுக்கு மேலாக மழை எதுவும் பெய்யாமல் இருந்து வந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் பருவமழை 56 சதவீதம் பற்றாக்குறையாக பெய்திருந்தது. இந்த மாதத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 29 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்திருந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் மற்றும் மலை பிரதேசமான குடகு, வடகர்நாடக மாவட்டங்களான தார்வார், பெலகாவி, பாகல்கோட்டை, கலபுரகி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரை மிதமான மழை பெய்து வருகிறது.

மற்ற மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. விளைநிலங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் பருவமழை தாமதமாக பெய்தாலும் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணா, பீமா, வரதா, தூத்கங்கா, மல்லபிரபா, துங்கா, ஷராவதி, நேத்ராவதி, குமாரதாரா, காளி, காவிரி, லட்சுமண தீர்த்தா உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. ஏராளமான தரைமட்ட பாலங்களை மூழ்கடித்தப்படி மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலோர, மலைநாடு மற்றும் வட கர்நாடகத்தில் சில மாவட்டங்கள் என 11 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

குடகு மாவட்டத்தில் நேற்றும் கனமழை நீடித்தது. இந்த கனமழையால் சோமவார்பேட்டை தாலுகா ஜாம்பூரை சேர்ந்த வத்சலா என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. பாகமண்டலா, தலைக்காவிரி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பாகண்டலா-நாபொக்லு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாகண்டேஸ்வரர் கோவில் படிக்கட்டுகள் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. காவிரி ஆற்றில் ெவள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். குடகில் தென்மேற்கு பருவமழையின் ருத்ரதாண்டவம் ெதாடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மண்சரிவு ஏற்படும் மற்றும் ஆபத்தான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருகிறார்கள்.

சோமவார்பேட்டை அருகே மல்லள்ளி அருவியை காண வந்த சுற்றுலா பயணிகள், சிறிய பாலத்தில் சிக்கி கொண்டனர். அவர்களை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். குடகில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு மாவட்டத்தில் மூடிகெரே, கலசா, கொப்பா, சிருங்கேரி, என்.ஆர்.புரா ஆகிய பகுதிகளில் நேற்றும் தொடர்ந்து கனமழை பெய்தது. கலசா அருகே பத்ரா ஆற்றில் ெவள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஹெப்பாலே பகுதியில் தரைமட்ட பாலம் மூழ்கி உள்ளது. இதனால் ஒரநாடு அன்னபூர்னேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலசாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. துங்கா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சிருங்கேரி சாரதம்மன் கோவில் மண்டபம் நீரில் மூழ்கி உள்ளது. கலசா-சிருங்கேரி இடைப்பட்ட பகுதியில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மின்தடையும் ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.

மேலும் சிக்கமகளூருவில் உள்ள ஒன்னம்மன் அருவி, மாணிக்கத்தரா அருவி, ஸ்ரீமனே அருவி, கல்லத்தி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவமொக்காவிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் சிவமொக்காவில் உள்ள லிங்கனமக்கி, பத்ரா அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. லிங்கனமக்கி அணை ஒரே நாளில் 5 அடியும், பத்ரா அணை ஒரே நாளில் 4 அடியும் உயர்ந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,819 அடி கொள்ளளவு கொண்ட லிங்கனமக்கி அணையில் இருந்து 1,775.15 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 73,505 கனஅடி தண்ணீர் வருகிறது.

பத்ராவதியில் உள்ள பத்ரா அணைக்கு வினாடிக்கு 57,352 கனஅடி தண்ணீரும், காஜனூரில் உள்ள துங்கா அணைக்கு வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. துங்கா அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் செந்நிறமாக தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. மேலும் சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியிலும் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்து பாதிப்ைப ஏற்படுத்தி உள்ளது.

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் தான் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உத்தரகன்னடா மாவட்டம் சித்தாப்புராவில் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓடும் நேத்ராவதி, குமாரதாரா, பல்குனி ஆறுகளிலும், உத்தரகன்னடாவில் ஓடும் காளி ஆற்றிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேத்ராவதி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் குக்கே சுப்பிரமணியா கோவிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்குனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 38 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

உத்தரகன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சபோலி கிராமத்தில் அரசு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்தது. நேற்று முன்தினம் விடுமுறை என்பதால்

பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை. இதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

உத்தரகன்னடாவில் உள்ள கத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 72 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கோபிஷிட்டா கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைபயிர்கள் மூழ்கி நாசமாகி உள்ளது.

கடலோர மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்பதால், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா பிஸ்லே பகுதியில் சுப்பிரமணியா சாலையில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.

தார்வார் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல், வடகர்நாடக மாவட்டமான கதக்கில் பெய்து வரும் கனமழையால் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் முண்டரகி தாலுகாவில் சிங்கடலூர், ஷீரனஹள்ளி, கங்காபுரா, கொர்லஹள்ளி, கக்கூரு, சேஸ்னூர் கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இந்த வெள்ளத்தால் ஹிம்மிகி கிராமத்தில் உள்ள தடுப்பணை நிரம்பி உள்ளது. இதனால் 8 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளது.

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா சிக்கபடசலகி கிராமத்தில் உள்ள ஷரமபிந்து சாகர் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் ஏராளமான இளைஞர்கள் தடுப்பணைக்கு சென்று செல்பி எடுத்து வருகிறார்கள். மராட்டிய எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் தொடர் கனமழையால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியத்தில் தொடர் கனமழையால் அங்குள்ள கொய்னா அணை நிரம்பி உள்ளது. இதனால் கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 14 ஆயரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

இதனால் சிக்கோடி தாலுகாவில் 9 தரைமட்ட பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா நரசிம்மவாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள தத்தா கோவில் மண்டபம் நீரில் மூழ்கியது. மேலும் தத்தா கோவிலில் தண்ணீர் புகுந்தது. அந்த கோவிலில் இடுப்பளவு தண்ணீர் இருந்தாலும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல், தார்வார், கலபுரகி, மைசூரு, ராமநகர், கோலார் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, குடகு, மைசூரு, ஹாசன், சிவமொக்கா, பெலகாவி, கதக் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 28-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுஞ்சனகட்டே நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகாவில் சுஞ்சனகட்டே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக மழை எதுவும் பெய்யாததால் சுஞ்சனகட்டே நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டது. தற்போது குடகு மாவட்டத்தில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருவதால் ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஹாரங்கி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுஞ்சனகட்டே நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதை காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

'செல்பி' எடுக்க முயன்று உயிரை பறிகொடுத்த வாலிபர்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 23). இவர் தனது நண்பர்களுடன் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா அரசினகுண்டே பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை காண வந்துள்ளார். அப்போது அவர் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஆனால் சரத்குமார் ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சி அருகே சென்று தனது செல்போனில் 'செல்பி' எடுத்தார். மேலும் தனது நண்பர்கள் மூலம் நீர்வீழ்ச்சியை ரசிப்பது போல, வீடியோ சூட்டும் சரத்குமார் எடுத்தார். அப்போது பாறையில் நின்று கொண்டிருந்த சரத்குமார், திடீரென்று கால் வழுக்கி நீர்வீழ்ச்சி தடாகத்தில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதுபற்றி அறிந்ததும் கொல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சரத்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதற்குள் சரத்குமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. செல்பி எடுக்க முயன்று வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சரத்குமார் நீர்வீழ்ச்சியில் தவறி விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்