கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு 8 நாட்கள் சிபிஐ காவல்

கொல்கத்தா சம்பவத்தில் கைதான மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு 8 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.

Update: 2024-09-03 12:41 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். அதேவேளை, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதவல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் சிலமணிநேரங்களில் மற்றொரு மருத்துவமனைக்கு முதல்வராக மாநில அரசு நியமித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து சந்தீப் கோஷை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்குபதில் அவரை நீண்ட நாளில் விடுமுறையில் இருக்கும்படி கொல்கத்தா ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அதேவேளை, பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது. மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின்போது சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாக்குவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு தொடர்பாக சந்தீப் கோஷின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சந்தீப் கோஷை அலிபூர் கோர்ட்டில் சிபிஐ ஆஜர்படுத்தினர். அப்போது, மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. 10 நாட்கள் விசாரணைக் காவல் கோரியிருந்த நிலையில், சி.பி.ஐ.க்கு 8 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில், கைதான சந்தீப் கோஷ் கூடுதல் செயலாளர் உள்பட மேலும் மூன்று பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்