ரெயில்களில் குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிப்பு; கூடுதலாக ரூ.2,800 கோடி வருவாய்

ரெயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கைக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படுவதால், 7 ஆண்டுகளில், கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 800 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Update: 2023-09-20 22:58 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ரெயில்களில், 5 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தனி படுக்கையோ, தனி இருக்கையோ பாதி கட்டணத்தில் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி, இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, குழந்தைகளுக்கு தனி படுக்கையோ, தனி இருக்கையோ பெறப்பட்டால், அதற்கு முழு கட்டணம் செலுத்த வேண்டும்.

தனி படுக்கை, தனி இருக்கை இல்லாமல், பெரியவர்களுடன் ஒரே படுக்கையை குழந்தைகள் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய விதிமுறை, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ரூ.2,800 கோடி வருவாய்

இந்நிலையில், இதனால் கிடைத்த வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், சந்திரசேகர் கவுர் என்பவர் கேட்ட கேள்விக்கு ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ரெயில்வே தகவல் சேவை மையம் பதில் அளித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரெயில்களில் குழந்தைகள் பயண கட்டண விதிமுறையில் செய்யப்பட்ட மாற்றத்தால், கடந்த 7 ஆண்டுகளில், ரூ.2 ஆயிரத்து 800 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

அதிகபட்சமாக, 2022-2023 நிதிஆண்டில், ரூ.560 கோடி கூடுதல் வருவாயும், குறைந்தபட்சமாக 2020-2021 நிதிஆண்டில் ரூ.157 கோடி கூடுதல் வருவாயும் கிடைத்தது.

முழு கட்டணத்தில் 10 கோடி குழந்தைகள்

7 ஆண்டுகளில், தனி படுக்கை பெற்று முழு கட்டணத்தில் 10 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் பயணித்துள்ளனர்.

தனி படுக்கை பெறாமல், பாதி கட்டணத்தில் 3 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பயணித்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்