சொத்து குவிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை- லோக் அயுக்தா கோர்ட்டு தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து லோக் அயுக்தா கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக கடந்த 2006-ம் ஆண்டு பணியாற்றியவர் சமிஉர் ரகுமான். இவா், துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்று விட்டார். கடந்த 2006-ம் ஆண்டு ரகுமான் இன்ஸ்பெக்டராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதே ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு சொந்தமான வீடு, உறவினர் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். அப்போது அவா் தனது வருமானத்தை காட்டியிலும் ரூ.79.79 லட்சத்திற்கு சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரகுமான், அவரது மனைவி மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மேலும் இதுதொடர்பான வழக்கு லோக் அயுக்தா கோாட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் லோக் அயுக்தா நீதிபதி லட்சுமி நாராயணபட் தீர்ப்பு கூறினார். அப்போது ரகுமான் வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் ரகுமானுக்கு ரூ.50 லட்சம், அவரது மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.