தலித்-பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல்
அவசர சட்டம் அமலில் உள்ள நிலையில் தலித்-பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
அவசர சட்டம் அமலில் உள்ள நிலையில் தலித்-பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு அதிகரிப்பு
கர்நாடகத்தில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு 24 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அதாவது தலித் சமூகத்திற்கு 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு 3-ல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த அவசர சட்டம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டம் 6 மாதங்கள் மட்டும் செல்லும்.
இதையடுத்து கர்நாடக அரசு சட்டசபையில் நேற்று தலித்-பழங்குடியின சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தது. அதில், "தலித்-பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் விஷயம் முக்கியமானது என்பதால் அதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகமோகன்தாஸ் குழு
கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் குழு பரிந்துரை செய்ததை அடுத்து தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 50 சதவீது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து இருப்பதன் மூலம் இட ஒதுக்கீடு அளவு 56 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு, இடஒதுக்கீட்டு அளவு எக்காரணம் கொண்டும் 50 சதவீதத்தை மீற கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதனால் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே இந்த இட ஒதுக்கீடு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.