இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசு தொந்தரவு செய்யாது - தேவேந்திர பட்னாவிஸ்

மராத்தியர்களுக்கு குன்பி சாதி சான்றிதழ் வழங்குவதன் மூலம் மராட்டிய அரசு இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை தொந்தரவு செய்யாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.;

Update:2023-09-18 04:15 IST

குன்பி சாதி சான்றிதழ்

ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மராத்தா இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தில் கடந்த 1-ந் தேதி வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் குதித்தனர். இதனால் மராட்டிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து மராட்டிய அரசு ஐதராபாத் நிஜாம் கால ஆவணங்கள் வைத்திருக்கும் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு குன்பி சாதி சான்றிதழ் வழங்க முடிவு செய்தது. குன்பிகள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருவதால் இது மரத்வாடா பகுதியை சேர்ந்த மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு பலனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு

இந்த நிலையில் இந்த முடிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்று கூறி இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மகாசங்கம் போராட்டத்தில் குதித்துள்ளது. குறிப்பாக சத்ரபதி சம்பாஜிநகர், நாக்பூர் மற்றும் சந்திராப்பூர் ஆகிய இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி நாக்பூர் விமான நிலையத்தில் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெளிவான நிலைப்பாடு

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் இடஒதுக்கீட்டை தொடவோ, குறைக்கவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ கூடாது என்பதில் மாநில அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எனவே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சத்ரபதி சம்பாஜிநகரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் இதுகுறித்து தனிப்பட்ட முறையில் நான் கோரிக்கை வைக்கிறேன். இங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அதேபோல சந்திராப்பூர் மற்றும் நாக்பூரிலும் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். நான் நாக்பூரில் உள்ளவர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டதை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்