மணிப்பூர் கலவரம்: முதல்-மந்திரி பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்கத் தவறியதற்காக முதல்-மந்திரி பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-08-19 19:00 GMT

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், குகி பழங்குடியின மக்களுக்கும் இடையே 3 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறபோதும் அங்கு அமைதி திரும்புவதற்கான எந்த சூழலும் இதுவரை தென்படவில்லை. மாறாக மீண்டும் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்று முன்தினம் நாகா மக்கள் அதிகம் வாழும் உக்ருல் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 3 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் அக்கட்சியின் பிரதிநிதிகள் குழு முன்தினம் மணிப்பூர் சென்றது. மாநிலத்தின் நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக 3 நாள் பயணமாக சென்றுள்ள அந்த குழு சுராசந்த்பூர் மற்றும் மொய்ராங் நகரங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தது. அதனை தொடர்ந்து சீதாராம் யெச்சூரி தலைமையிலான பிரதிநிதிகள் குழு மாநில கவர்னர் அனுசுயா உய்கேவை சந்தித்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியது.

நலிந்த நிலையில் குழந்தைகள்

அப்போது நிவாரண முகாம்களை பராமரிப்பதிலும், நடத்துவதிலும் மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் செய்த ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று கவர்னரிடம் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சத்தான உணவு இல்லாமல் நலிந்த நிலையில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசியல் தீர்வினால் மட்டுமே தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியை கொண்டு வர முடியும் என்று கூறிய சீதாராம் யெச்சூரி, போலீஸ் ஆயுத கிடங்குகளில் இருந்து துப்பாக்கி உள்ளிட் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்தார்.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்

அதை தொடர்ந்து, தற்போதைய மோதலுக்கு ஒரு இணக்கமான தீர்வைக் கொண்டுவருவதற்கு அரசியல் கட்சிகள், கட்சி எல்லைகளை கடந்து அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் கவர்னர் அனுசுயா உய்கே தெரிவித்தார்.

இந்த நிலையில் மணிப்பூர் சென்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்ற திரிபுரா எம்.எல்.ஏ.வும், கட்சியின் மாநில தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி, மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்கத் தவறியதற்காக முதல்-மந்திரி பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். உத்தி

இது குறித்து அவர் கூறுகையில், "மணிப்பூரில் நிலவும் கலவரத்தை நாங்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையாக பார்க்கவில்லை. பிளவுகளை உருவாக்கி மக்கள் மத்தியில் அவநம்பிக்கையைத் தூண்டி அவர்களை ஆள வேண்டும் என்கிற பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். உத்தியின் ஒரு பகுதியாகும்.

மணிப்பூரில் நாளுக்கு நாள் அவநம்பிக்கை அதிகரித்து வருவதால், நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள பிரேன் சிங் அரசாங்கம் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் வெளிப்படையான எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது. எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்