ஒரு நாட்டை மதம் உருவாக்குவதில்லை: ஜாவித் அக்தரின் அடுத்த அதிரடி

ஒரு நாட்டை மதம் உருவாக்குவதில்லை என்றும் அந்த முயற்சியில் தோல்வி அடைந்த ஒன்றாக பாகிஸ்தானை எடுத்துக்காட்டாக எண்ணுகிறேன் என்றும் ஜாவித் அக்தர் கூறியுள்ளார்.

Update: 2023-02-25 10:32 GMT



புனே,


இந்தி திரையுலகில் பாடல்களை எழுதும் பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் (வயது 78). சமீபத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்றார். அந்நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமது பயசை நினைவுகூரும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் அக்தர் கலந்து கொண்டார்.

அப்போது, அவரிடம் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒரு நபர், நீங்கள் பாகிஸ்தானிற்கு பலமுறை வந்திருக்கிறீர்கள். திரும்பி சென்றபின்னர், உங்கள் மக்களிடம் பாகிஸ்தான் மக்கள் எவ்வளவு நல்லவர்கள் என எடுத்து கூறியதுண்டா? என கேட்டுள்ளார்.

அக்தர் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், நாம் ஒருவரை ஒருவர் குறைகூறி கொண்டிருக்க வேண்டாம். அது பிரச்சனைகளுக்கு தீர்வு தராது என கூறினார்.

பின்னர் அவர், மும்பை பயங்கரவாத தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று நாம் பார்த்தோம். அவர்கள் (பயங்கரவாதிகளை குறிப்பிட்டு) நார்வே நாட்டில் இருந்தோ அல்லது எகிப்தில் இருந்தோ வரவில்லை.

அவர்கள் உங்களுடைய நாட்டில் இன்னும் சுதந்திரமுடன் உலவி வருகின்றனர். இதுபற்றி இந்தியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர் என கூறினார்.

தொடர்ந்து அவர், பாகிஸ்தானிய கலைஞர்களான நஸ்ரத் பதே அலி கான் மற்றும் மெஹதி ஹாசனுக்கு இந்தியாவில் பெரிய பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

ஆனால், பிரபல இந்திய பாடகியான லதா மங்கேஷ்கருக்காக ஒரு நிகழ்ச்சியை கூட பாகிஸ்தான் ஒருபோதும் நடத்தியதில்லை என கூறினார்.

இந்தியாவில், மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் பாதுகாப்பு அதிகாரிகள். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில், பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளும் சேதமடைந்தன.

பாகிஸ்தான் நாட்டை பற்றிய அவரது இந்த பேச்சுக்கு பாகிஸ்தானிய பிரபலங்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும், இந்தியாவில் அரசியல்வாதிகள் உள்பட பிரபலங்கள் பலரும் அவரது இந்த பேச்சுக்காக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டியத்தின் மும்பை நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜாவித் அக்தரிடம் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது தவறு என்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய தவறுகளை பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டால், நிச்சயம் அதில் பாகிஸ்தான் உருவாக்கம் இடம்பெறும். அது பகுத்தறிவுக்கு ஒவ்வாத, காரண காரியங்களற்றது.

ஆனால், அதுவே தற்போது உண்மையாகி விட்டது. அதனை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அது சரியல்ல. அது மிக பகுத்தறிவற்ற ஒன்று. ஒரு நாட்டை மதம் உருவாக்குவதில்லை. அதுவே ஒன்று சேர்ப்பதற்கான ஒரு விசயம் ஆகாது.

இதேபோன்ற முயற்சியை பிரிட்டிஷார் முயற்சித்து, மத அடிப்படையிலான நாடுகளை உருவாக்க முயற்சித்து, அதில் தோல்வியே கண்டனர் என சாடியுள்ளார்.

அப்படி அது உண்மையாகுமென்றால், ஒட்டு மொத்த மத்திய கிழக்கு நாடுகளும் ஒரே நாடாக ஆகியிருக்க வேண்டும். ஒட்டு மொத்த ஐரோப்பாவும் ஒரே நாடாக ஆகியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நீங்கள் ஒன்றை தவிர்க்க தொடங்குகிறீர்கள். அந்த நாளில் இருந்து, உண்மையான வெங்காயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதன் மேல் தோலை நீக்கி வருகின்றீர்கள் (ஆனால் எதனையும் கண்டறியவில்லை).

பாகிஸ்தானில் நீண்டகாலம் ஆக, அகமதியர்கள் மற்றும் ஷியாக்களை முஸ்லிம்களாகவே எண்ணுவதில்லை. அந்த தவிர்த்தல் இன்னும் தொடர்கிறது. இதில் இருந்து நாம் என்ன கற்று கொண்டோம்?

70 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் செய்த விசயங்களை இன்று நாம் செய்கிறோம். உங்களுக்கு இந்து ராஷ்டிரா வேண்டும். பாகிஸ்தானியர்களால் செய்ய முடியாத ஒன்று, உலக நாடுகளால் முடியாத ஒன்று, நீங்கள் என்ன உருவாக்க இருக்கிறீர்கள்?

இந்து ராஷ்டிரா என்றால் என்னவென எனக்கு தெரியாது. மத அடிப்படையிலான நாடு என்றால் என்னவென்பது பற்றி எனக்கு தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்