சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

Update: 2022-12-24 08:17 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

புதிய வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதன் அடிப்படையில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு சதவீதம் ரேண்டம் (Random) அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பயணிகளின் மாதிரிகளை சேகரித்த பிறகே அவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஒருவேளை பயணிகளுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட விவரத்தை மாநில அரசு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த ரத்த மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவானது இன்று காலை 10 மணி முதல் அனைத்து மாநிலங்களிலும் கட்டாயம் ஆக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. பல்வேறு விமான நிலையங்களில் இந்த ரேண்டம் பரிசோதனை தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன்படி சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறிகள் அல்லது சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களது ரத்த மாதிரிகளை உடனடியாக மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்