ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி: வழக்கமான பரிசோதனை என விளக்கம்

நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என எக்ஸ் தள பதிவில் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

Update: 2024-10-07 07:59 GMT

மும்பை,

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு (வயது 86) நேற்று நள்ளிரவு திடீரென ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. உடனே அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறப்பட்டது. ரத்தன் டாடா சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போது சற்று கவலைக்கிடமாக இருந்ததாகவும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாருக் அஸ்பி கோல்வாலா தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரத்தன் டாடா தனது எக்ஸ் தள பதிவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன், மேலும் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். வருத்தப்பட வேண்டியதில்லை. பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்