ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல்
பிரபல இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
மும்பை,
பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தொழில்துறையின் தலைசிறந்தவரான ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவருடைய தொலைநோக்கு மற்றும் மனிதாபிமானம் அவரது வாழ்நாளில் நிறுவப்பட்டு வளர்க்கப்பட்ட பல தொண்டு நிறுவனங்களின் பணிகளில் வெளிப்பட்டது. அவர் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் உண்மையைப் பேசும் துணிச்சலைக் கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியதை நினைவுகூருகிறேன்" என்று அதில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது ரத்தன் டாடாவின் உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி டாடா அறக்கட்டளை வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில், ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என தெரிவித்து உள்ளது.
ஒர்லியில் உள்ள டாக்டர் மோசஸ் சாலையில் உள்ள வழிபாட்டு அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பொதுமக்கள், தேசிய மையத்தின் வாயில் 3-ன் வழியே சென்று, வாயில் 2 வழியே வெளியேறும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.