குண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கபே 8 நாட்களுக்கு பின்பு இன்று திறப்பு

ராமேஸ்வரம் கபேவின் முன் இணை உரிமையாளர் ராகவேந்திர ராவ் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஒன்றாக நின்ற பின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.;

Update: 2024-03-09 03:07 GMT

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில், ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில், ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே என்ற பெயரில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 1-ந்தேதி மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

இந்த சம்பவத்தில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி கர்நாடக போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வழியே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என தெரிய வந்தது.

இதன்பின்னர் இந்த வழக்கு விசாரணையானது, தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) இந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது. வெடிகுண்டு வைத்த சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்தது.

இதுபற்றி என்.ஐ.ஏ. வெளியிட்ட புகைப்படத்தில், சந்தேகத்திற்குரிய நபர் தொப்பி, முக கவசம் மற்றும் கண்ணாடியை அணிந்தபடி காணப்படுகிறார். அவர் அந்த கபேக்குள் நுழையும் காட்சியும் இடம் பெற்றது.

அந்த மர்ம நபர் பற்றிய தகவல்களை அளிப்பதற்காக, தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றையும் என்.ஐ.ஏ. பகிர்ந்துள்ளது. அதில், அவரை பற்றிய தகவலை பொதுமக்கள் அனுப்பலாம். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று என்.ஐ.ஏ. உறுதி அளித்து உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் குண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கபே 8 நாட்களுக்கு பின்பு இன்று திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களிடம் முறையான சோதனை நடத்தப்பட்டு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதற்கு முன்பு, கபேவின் முன் அதன் இணை உரிமையாளரான ராகவேந்திர ராவ் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஒன்றாக நின்ற பின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்பு பணிகள் தொடங்கப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் வழங்கப்படுவதற்கு வேண்டிய பணிகளை கொண்டு கபே புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ராகவேந்திர ராவ் கூறும்போது, இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு குழுவை நாங்கள் பலப்படுத்தி உள்ளோம். முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய குழுவை கொண்டு எங்கள் பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்