அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா.. 22-ம் தேதி தேர்வு செய்தது ஏன்? என்ன சிறப்பு தெரியுமா?

அயோத்தி ராமர் கோவில் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது ஜனவரி 22 ஆம் தேதி ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

Update: 2024-01-06 10:21 GMT

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

அயோத்தி ராமர் கோவில் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக எதற்காக 2024ம் ஆண்டின் ஜனவரி 22ம் தேதி தேர்வு செய்யப்பட்டு, முகூர்த்த நேரமாக பகல் 11.53 முதல் 12.33 வரையிலான நேரமும் குறிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

வரும் 22ஆம் தேதி மிருகசீரிஷம் ரா நட்சத்திரம் வருகிறது. அதிகாலை 3.52 மணிக்கு தொடங்கும் இது மறுநாள் ஜனவரி 23, 2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.58 வரை நீடிக்கிறது. இதன் காரணமாகவே ஜன. 22ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் காலை 11:51 முதல் மதியம் 12:33 நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனத் தெரிகிறது. மிருகசீரிஷம் நட்சத்திரம் என்பது வேத ஜோதிடத்தில் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது அழிவே இல்லாத சோமா என்ற கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்து பாரம்பரியத்தின்படி இது மங்களகரமான தருணமாகக் கருதப்படுகிறது.

புதிய காரியங்களை தொடங்க இது சரியான நாளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு செயலையும் இந்த நாளில் தொடங்கினால் நன்மை தரும் என்பது இந்துகளின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இந்த நாளில் அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை மிருகசீரிஷம் நட்சத்திர காலத்துடன் ஒத்துப்போகின்றன. இத்தகைய காரணங்களாலேயே 22 ஆம் தேதியை ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தேர்வு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்