மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நிறைவடைவதால் 2 மத்திய மந்திரிகள் ராஜினாமா

மத்திய மந்திரிகள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இதில் முக்தர் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update: 2022-07-06 23:55 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி. இவர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து, மந்திரி பதவியை வகித்து வந்தவர் ஆவார். இவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது.

ஆனால் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடவில்லை.

இந்தநிலையில் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று திடீரென தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக அவர் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசிலும் மத்திய மந்திரி பதவி வகித்து உள்ளார்.

3 முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும், ஒரு முறை மக்களவை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இவர், மாநிலங்களவை துணைத்தலைவராகவும் இருந்தார்.

தற்போதைய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முக்தர் அப்பாஸ் நக்வி களமிறக்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்திருப்பது, இந்த தகவல்களை மேலும் உறுதிபடுத்துவதாக அமைந்து உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் உருக்குத்துறை மந்திரியாக இருந்த ஆர்.சி.பி.சிங்கின் பதவிக்காலமும் இன்றுடன் நிறைவடைகிறது.

இதைத்தொடர்ந்து ஆர்.சி.பி.சிங்கும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்தவர் ஆவார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில், முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி.சிங்குக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இரு மந்திரிகளின் தன்னலமற்ற சேவைகளை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.

இதற்கிடையே ராஜினாமா செய்துள்ள முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவடைந்ததன் மூலம், நாடாளுமன்றத்தில் பா.ஜனதா முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகி விட்டது.

நக்வியுடன் 3 முஸ்லிம் பா.ஜனதா எம்.பி.க்களின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் யாரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 395 பா.ஜனதா எம்.பி.க்கள் இருந்தபோதும், அவர்களில் யாரும் முஸ்லிம் மதத்தவர் இல்லை.

இது தொடர்பாக பா.ஜனதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ஆனால் இந்த குற்றச்சாட்டை நிராகரித்து வரும் பா.ஜனதா, தங்கள் எம்.பி.க்கள் அனைத்து சமூகத்தினருக்காகவும் உழைத்து வருவதாகவும், எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானவர்கள் அல்ல என்றும் கூறி வருகிறது.

மத்திய மந்திரிகள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங் ஆகியோரது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். மேலும் முக்தர் அப்பாஸ் நக்வி கவனித்து வந்த சிறுபான்மையினர் நலத்துறையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும், ஆர்.சி.பி.சிங்கின் உருக்குத்துறையை மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்