கார்வாரில், அரபிக்கடலில் நீர்மூழ்கி கப்பலில் 4 மணி நேரம் பயணித்த ராஜ்நாத்சிங்
கார்வாரில் அரபிக்கடலில் நீர்மூழ்கி கப்பலில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 4 மணி நேரம் பயணித்தார்.;
கார்வார்
கார்வாரில் அரபிக்கடலில் நீர்மூழ்கி கப்பலில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 4 மணி நேரம் பயணித்தார்.
நீர்மூழ்கி கப்பலில் பயணம்
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கார்வாருக்கு வந்தார். அங்கு கடற்படை தளத்தில் தங்கிய அவர் நேற்று ஐ.என்.எஸ். கண்டேரி நீர்மூழ்கி கப்பலில் 4 மணி நேரம் பயணம் செய்தார். அதாவது காலை 9.30 மணிக்கு அந்த கப்பலில் கடலுக்குள் சென்ற அவர் மதியம் 1.30 மணிக்கு அந்த கப்பலை விட்டு வெளியே வந்தார்.
கடலில் நடைபெறும் போர் நடவடிக்கைகள், ஆயுத பயன்பாடு, அந்த கப்பலில் பணியாற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விமானம் தாங்கி கப்பல்
நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் வருகிற சுதந்திர தினத்தன்று கடற்படையில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் ஐ.என்.எஸ். விக்ரமாதித்ய கப்பல் கடல் பாதுகாப்பில் ஈடுபடும்.
இதனால் கடற்பாதுகாப்புக்கு கூடுதல் பலம் கிடைக்கும். நாட்டின் கடலோர பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்திய கடற்படை பலப்படுத்தப்படுகிறது. இது எந்த நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சி அல்ல.
அதிக முன்னுரிமை
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்புத்துறையில் தற்சார்பு திட்டத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. கடற்படைக்கு 41 போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 39 கப்பல்கள் நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டன. அந்த நீர்மூழ்கி கப்பலில் இங்கு கார்வாரில் கடலுக்குள் பயணித்து அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
இதற்கு முன்பு அவர் பிராஜ்கட் சீபர்டு திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராஜ்நாத்சிங் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார், கர்நாடக மண்டல தளபதி அதுல்ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.