ராஜஸ்தான்: காருக்குள் மறதியாக விட்டுச் சென்ற குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

மறதியாக காருக்குள் வைத்து பூட்டப்பட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி இறந்ததை உணர்ந்த கணவன்-மனைவி இருவரும் கதறி துடித்தனர்.;

Update:2024-05-16 16:25 IST

கோட்டா:

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டம் கடோலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சாகர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று இரவு ஒரு திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். திருமணம் நடைபெறும் இடத்தை அடைந்ததும், மனைவியும் மூத்த மகளும் காரை விட்டு இறங்கி உள்ளனர். இரண்டாவது மகள் கோர்விகாவும் (வயது 3) இறங்கிவிட்டதாக நினைத்து காரை பார்க்கிங் பகுதிக்கு ஓட்டிச் சென்ற பிரதீப், காரை பூட்டிவிட்டு வந்துவிட்டார்.

இரண்டு குழந்தைகளும் மனைவியுடன் இருப்பதாக நினைத்து உள்ளே சென்ற அவர் வெகுநேரமாக அவர்களை சந்திக்கவில்லை. உறவினர்களை சந்தித்து பேசுவதில் பிசியாக இருந்தார். அதேபோல் கோர்விகா தன் கணவனிடம் இருப்பதாக நினைத்த மனைவி, வேறு பகுதியில் அமர்ந்து உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இப்படி சுமர் 2 மணி நேரம் கடந்தபின் கணவன்-மனைவி இருவரும் சந்தித்தனர். அப்போது கோர்விகா எங்கே? என ஒருவரையொருவர் கேட்க, குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. குழந்தையை தேட ஆரம்பித்தனர். திருமண விழா நடைபெறும் பகுதி முழுவதும் தேடிவிட்டு நேராக காருக்கு வந்தனர். காரை திறந்து பார்த்தபோது காருக்குள் குழந்தை மூச்சுத்திணறி அசைவற்ற நிலையில் கிடந்தது. குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மறதியாக காருக்குள் வைத்து பூட்டப்பட்ட குழந்தை மூச்சுத்திணறி இறந்ததை உணர்ந்த கணவன்-மனைவி இருவரும் கதறி துடித்தனர்.

கடோலி போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியானது. தங்களின் தவறால் குழந்தை இறந்ததால் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம், வழக்குப்பதிவு செய்ய விரும்பவில்லை என பெற்றோர் கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்