பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் தொடக்கம்
பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.;
பெங்களூரு:
முதல்-மந்திரி உத்தரவு
பெங்களூருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் துயரத்தை அனுபவித்தனர். இந்த நிலையில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள், வீடுகள், கடைகள், கட்டிடங்கள் கட்டியதை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்ற மாநகராட்சிக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட மகாதேவபுரா மண்டலத்தின் தான் அதிகமாக ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்தன. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு சொந்தமான கட்டிடங்களை தான் அதிகாரிகள் இடித்து அகற்றுவதாகவும், பெரிய நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் செய்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் வேகமாக நடந்த ஆக்கிரமிப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
மீண்டும் பணிகள் தொடக்கம்
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், தசராவுக்கு பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்றும் கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. மகாதேவபுரா மண்டலத்தில் உள்ள ஆர்.நாராயணபுரா, சிலவந்தனகெரே, கசவனஹள்ளி, பசவனபுரா ஆகிய பகுதிகளில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. மேற்கண்ட பகுதியில் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகளின் சுவர்கள், கொட்டகைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.