பெங்களூருவில் கனமழைக்கு மந்திரிகள் வீடுகள் முன்பு மழைநீர் தேங்கியது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு மந்திரிகள் வீடுகள் முன்பு மழைநீர் தேங்கியது.

Update: 2022-10-15 22:39 GMT

பெங்களூரு:

கனமழை

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் காலை, இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பெங்களூருவில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. அதாவது 5 மணி நேரத்திற்கு மேல் பெங்களூருவில் கனமழை பெய்தது.

ராஜாஜிநகர், மெஜஸ்டிக், பசவேஸ்வராநகர், ஹெப்பால், விஜயநகர், சாந்திநகர், ஜெயநகர், கே.ஆர்.புரம், இந்திராநகர், சிவாஜிநகர், கன்டோன்மெண்ட், வசந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வேலை முடிந்துவீட்டிற்கு திரும்பியவர்கள் கடும் சிரமத்தை அனுபவித்தனர். வாகனங்களும் சாலையில் தத்தளித்து சென்றன.

மந்திரிகள் வீடுகள் முன்பு...

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் இரவு முழுவதும் அந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். வசந்த்நகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதியில் உள்ள மந்திரிகள் சி.சி.பட்டீல், முருகேஷ் நிரானி ஆகியோரின் அரசு வீடுகள் முன்பு தண்ணீர் சூழ்ந்து நின்றது.

மேலும் மந்திரிகள் வீட்டின் முன்பாக செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது. இந்த நிலையில் நேற்று காலை மந்திரிகள் வீடுகள் முன்பு சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி நடந்தது. இதற்கிடையே பெங்களூருவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பெங்களூருவில் பெய்த மழை அளவு

பெங்களூருவில் நேற்று காலை 7.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு குறித்து தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் 40.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதேபோல் சவுடேஷ்வரி வார்டில் 43.5 மில்லி மீட்டர் மழையும், எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் 35 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. ராஜாஜிநகர், பி.டி.எம். லே-அவுட், ஒயிட்பீல்டு பகுதிகளில் முறையே 34 மில்லி மீட்டர், 31.5 மில்லி மீட்டர், 31.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும், காட்டன்பேட்டை 28.5 மில்லி மீட்டர், லால்பாக் 25.5 மில்லி மீட்டர், கே.ஆா்.புரம் 25 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவானது. பேகூரில் 97 மில்லி மீட்டரும், நாயன்டஹள்ளியில் 65.5 மில்லி மீட்டரும், நந்தினி லே-அவுட்டில் 58.5 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கெங்கேரி மற்றும் பொம்மனஹள்ளியில் தலா 52.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்