உத்தரபிரதேசத்தில் யாத்திரை: ராகுல்காந்திக்கு கல்லூரியில் தங்க அனுமதி மறுப்பு
காங்கிரஸ் யாத்திரைக்கு வேண்டுமென்றே தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று படோகி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூறினார்.;
படோகி,
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பாரத் ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். உத்தரபிரதேசத்தில் இந்த யாத்திரை தொடர உள்ள நிலையில், அவர் ஒரு கல்லூரியில் தங்க அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அந்த கல்லூரியில் போலீஸ் தேர்வு நடைபெற இருப்பதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து படோகி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூறும்போது, "ராகுல்காந்தியின் யாத்திரை குறித்து ஒருவாரம் முன்பாகவே தகவல் தெரிவித்து ஞானபூர் விபூதி நாராயணன் கல்லூரியில் தங்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தேர்வு மையமாக கல்லூரி மாற்றப்பட்டு இருப்பதாக கூறி தங்க அனுமதி மறுத்துவிட்டனர். காங்கிரஸ் யாத்திரைக்கு வேண்டுமென்றே தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்" என்று கூறினார்.
இதையடுத்து ராகுல்காந்தி மற்றும் அவரது பாதுகாவலர் குழு மற்றும் முக்கிய பிரமுகர்கள், லத்பூரில் உள்ள ஒரு பண்ணையில் தங்குவதாக அவர் தெரிவித்தார்.