"ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்": நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரிகள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-03-13 06:09 GMT

புதுடெல்லி

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையுடன் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தாா். தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு பிரதமா் நரேந்திர மோடி இரு அவைகளிலும் பதிலளித்தாா்.

பட்ஜெட் மீதான பொது விவாதமும் முதல்கட்ட கூட்டத்தொடரில் நடைபெற்றது. அந்த விவாதங்களுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தார். அதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் 13-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இன்று ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா். மேலும், நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான 2-ஆவது கூடுதல் மானிய கோரிக்கை மசோதாவையும் அவா் தாக்கல் செய்யவுள்ளாா்.

இன்று அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிரகலாத் ஜோஷியும், மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பேசினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்