மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று தொடக்கம்
ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில் இன்று 2-வது கட்டமாக பாத யாத்திரையை தொடங்குகிறார்
இம்பால்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இந்த யாத்திரையை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத்தொடர்ந்து தவுபல் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்குகிறது.
இதைப்போல அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வெடுப்பதற்கும் மாநில அரசு அனுமதி மறுத்தது. இதனால் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.