காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.;
ஐதரபாத்,
ஐதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- நான் பாஜகவிற்கு எதிராக போராடி வருகிறேன். அதனால்தான் என்மீது ஏகப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்னுடைய எம்.பி பதவியை பறித்தனர். என் வீட்டையும் எடுத்துக் கொண்டனர். உங்கள் முதல் மந்திரி சந்திரசேகர ராவ், பாஜகவை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். அதனால்தான் அவர் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவதில்லை. ஓவைசியின் எம்.ஐ.எம் கட்சிகூட நாடு முழுவதும் தேர்தல்களில் பங்கேற்று பாஜகவிற்கு ஒத்துழைக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஓபிசி பிரிவினரின் மக்கள் தொகை எவ்வளவு என கேள்வி எழுப்பினேன். நாட்டை 90 உயர் அதிகாரிகள் ஆட்சி செய்கிறார்கள். ஆனால், அதில் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் வெறும் 3 அல்லது 4 பேர் மட்டுமே இருப்பார்கள். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தெலங்கானா உள்பட நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்றார்.
தெலங்கானாவில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.