'அக்னிபாதை' திட்டத்துக்கு ராகுல், பிரியங்கா எதிர்ப்பு
‘அக்னிபாதை’ திட்டத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
முப்படைகளில் இளம் தலைமுறையினரை 4 ஆண்டு காலத்துக்கு சேர்ப்பதற்கான 'அக்னிபாதை' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ''இந்தியா இருமுனைகளில் அச்சுறுத்தலை சந்தித்து வரும்போது அக்னிபாதை திட்டம் தேவையற்றது. அது நமது படையினரின் செயல்திறனை குறைத்துவிடும். படையினரின் கண்ணியம், பாரம்பரியம், வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ''இந்த 4 ஆண்டு பணியை ஏமாற்றுவேலை என்று இளைஞர்கள் சொல்கிறார்கள். எந்த விவாதமோ, சிந்தனையோ இல்லாமல், தன்னிச்சையாக இதை அரசு செய்கிறது'' என்று கூறியுள்ளார்.