சோனியா காந்தியிடம் விசாரணை; கர்நாடகாவில் அமலாக்க துறை அலுவலகம் வெளியே கார் தீ வைத்து எரிப்பு

சோனியா காந்தியிடம் நடந்த அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவின் அமலாக்க துறை அலுவலகம் வெளியே கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-07-21 11:58 GMT



பெங்களூரு,



நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். சோனியா காந்தியுடன், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார்.

சோனியா காந்தியிடம் இன்று நடைபெற்ற 3 மணி நேர விசாரணை நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஜூலை 25-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். அதனுடன், காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பீகார் தலைநகர் பாட்னா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் சாந்திநகர் பகுதியில் அமலாக்க துறை அலுவலகம் வெளியே இளைஞர் காங்கிரசார் சிலர் கார் ஒன்றை தீ வைத்து எரித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஷேஷாத்ரிபுரம் மற்றும் சாந்திநகர் பகுதியில் தலா ஒரு வாகனம் மீது மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்க முயற்சித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் தொடர்புடைய நபர்கள் எந்த இயக்கத்தினை சேர்ந்தவர்கள் என விசாரணை நடந்து வருகிறது. அந்த கார் அவர்களது சொந்த காரா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஷேஷாத்ரிபுரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என பெங்களூரு மத்திய பிரிவு போலீஸ் கமிஷனர் ஆர். ஸ்ரீனிவாச கவுடா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்