வினாத்தாள் கசிவு விவகாரம்; நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? - மத்திய கல்வி மந்திரி விளக்கம்
வினாத்தாள் கசிவு புகார்களுக்கு நடுவே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
புதுடெல்லி,
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழும்பின.
இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நீட் தேர்வில் 0.001 சதவீத அளவிற்கு அலட்சியம் கண்டறியப்பட்டாலும் அதை மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது.
இதனிடையே தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்பட்ட 'நெட்' தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்திருப்பதாகவும், இதனால் இந்த ஆண்டுக்கான 'நெட்' தேர்வை ரத்து செய்வது என முடிவு செய்திருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு புகார்களுக்கு நடுவே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நீட் வினாத்தாள் கசிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே பாதித்துள்ளது. கடந்த 2004 மற்றும் 2015ம் ஆண்டுகளில் பெரிய அளவில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தன. தற்போது நடந்துள்ள சம்பவம் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்வதால் நேர்மையான முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டால் எடுக்கப்படும் முடிவே இறுதியானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.