விதான சவுதாவில் ரூ.10½ லட்சம் சிக்கியது தொடர்பாக ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே சூடான விவாதம்

பெங்களூரு விதான சவுதாவில் ரூ.10½ லட்சம் சிக்கியது தொடர்பாக ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-06 21:26 GMT

பெங்களூரு:

பெங்களூரு விதான சவுதாவில் ரூ.10½ லட்சம் சிக்கியது தொடர்பாக ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.

சூடான விவாதம்

பெங்களூரு விதான சவுதாவில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஜெகதீஷ் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.10½ லட்சம் சிக்கியது. இதுகுறித்து விதான சவுதா போலீசார், உரிய ஆவணங்களை வழங்குமாறு அவரிடம் கூறினர். அவர் ஆவணங்களை வழங்காததால், ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். இந்த பணம் தொடர்பாக ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் களத்தை சற்று சூடாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி, விதான சவுதாவை வணிக வளாகமாக பா.ஜனதா மாற்றிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "விதான சவுதாவில் லஞ்ச பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இது முதல்-மந்திரியின் அருகில் நடந்து கொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஜெகதீஷ், யாருக்கு கொடுப்பதற்காக அந்த பணத்தை எடுத்து வந்தார்?. அவர் முதல்-மந்திரிக்கோ அல்லது பொதுப்பணித்துறை மந்திரிக்கோ கொடுப்பதற்காக அந்த பணத்தை எடுத்து வந்திருப்பார்?" என்றார்.

ஆதாரம் எங்கே?

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "விதான சவுதாவில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடைபெறுவது இல்லை என்பதை இந்த விஷயம் நிரூபித்துள்ளது. 40 அல்லது 50 சதவீத கமிஷன் கொடுக்காமல் எந்த 'பில்'லுக்கும் ஒப்புதல் வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்து நாங்கள் கூறினால் அதற்கு ஆதாரம் எங்கே என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள். அதற்கு ரூ.10½ லட்சம் ஆதாரம் இல்லையா?" என்றார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது மந்திரி புட்டரங்கஷெட்டி அலுவலக ஊழியர் ரூ.25 லட்சத்தை விதான சவுதாவுக்கு எடுத்து வந்தார். அந்த பணம் எடுத்து வந்த நபரை அப்போது இருந்த போலீசார் கைது செய்தனரா?. புட்டரங்கஷெட்டி நீக்கப்பட்டாரா?. ஊழலுக்கு எதிரான லோக்அயுக்தாவின் அதிகாரத்தை பறித்தவர் சித்தராமையா. பண விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உண்மைகள் விரைவில் வெளிவரும்" என்றார்.

விசாரணை நடக்கிறது

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறும்போது, "பணம் எடுத்து வரப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எங்கிருந்து, யாருக்காக அந்த பணம் எடுத்து வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் மேலும் கருத்து கூற முடியாது" என்றார். பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கூறுகையில், "எனக்கு கொடுப்பதற்காக ரூ.10½ லட்சம் எடுத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியல்ல. இது உண்மைக்கு புறம்பானது. அந்த பணம் எனக்காக எடுத்து வரப்பட்டு இருந்தால், எதற்காக விதான சவுதாவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். வேறு எங்காவது வைத்து அந்த பணத்தை அவர் என்னிடம் கொடுத்திருப்பாரே. போலீசார் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பர்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்