பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் ராஜினாமா; ஜனாதிபதி முர்மு ஒப்புதல்
பஞ்சாப் கவர்னராக பன்வாரிலால் இருந்தபோது, பல்வேறு சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டது என ஆம் ஆத்மி அரசு குற்றச்சாட்டை கூறி வந்தது.
புதுடெல்லி,
பஞ்சாபின் கவர்னராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் (வயது 83) தனிப்பட்ட காரணங்கள் மற்றும் பிற குறிப்பிட்ட விசயங்களை முன்னிட்டு, கவர்னர் மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேச நிர்வாக பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவு பற்றி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடந்த பிப்ரவரியில் விரிவான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.
இதனையேற்று அதற்கான ஒப்புதலை வழங்கும்படி அந்த கடிதத்தில் அவர் கேட்டு கொண்டார். எனினும், அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பஞ்சாப் கவர்னராக புரோகித் பதவியேற்றார். அதற்கு முன் 4 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர்.
பஞ்சாபில் அவர் கவர்னராக இருந்தபோது, ஆம் ஆத்மி அரசுடன் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டது. பல்வேறு சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டது என கூறப்பட்டு வந்தது.
புரோகித்துக்கு பா.ஜ.க.வில் செல்வாக்கு உள்ளது என ஆம் ஆத்மி அடிக்கடி குற்றச்சாட்டு கூறியதுடன், அவர்களுடைய அரசுக்கு எதிராக புரோகித் சதி திட்டம் தீட்டுகிறார் என்றும் கூறியது. இந்நிலையில், புரோக்கித்தின் பதவி விலகலை ஜனாதிபதி முர்மு ஏற்று கொண்டார்.