நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு

நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்து இன்றுடன் (சனிக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது. சடங்குகளை நிறைவேற்ற குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Update: 2022-10-28 18:45 GMT

பெங்களூரு:

நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்து இன்றுடன் (சனிக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது. சடங்குகளை நிறைவேற்ற குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

புனித் ராஜ்குமார்

நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 45 வயதே ஆன இளம் நடிகர், அதுவும் டாக்டர் ராஜ்குமாரின் இளைய மகன், திறமைமிக்க திரை கலைஞர், ரசிகர்கள் மட்டுமின்றி கன்னடா்களால் அப்பு என்று அன்புடன் அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் திடீரென மரணம் அடைந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒட்டுமொத்த கர்நாடகமும் துக்கத்தில் மூழ்கியது. கர்நாடக திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டது.

அவரது உடல் பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது. 3 நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இரவு-பகல் பாராமல் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து மரியாதை செலுத்தியது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளமா? என்று பிற மாநிலங்களை சேர்ந்த மக்கள் வியப்புடன் பார்த்தனர். அவரது உடல் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாடல் கலைஞர்கள்

அவரது சமாதிக்கு இன்னமும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார்கள். அவர் கடைசியாக காடுகள் குறித்த விழிப்புணர்வு ஆவண படத்தில் நடித்து முடித்திருந்தார். அந்த படம் நேற்று கர்நாடகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் பார்த்து ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொருபுறம் அவர் நம்முடன் இல்லையே என்று நினைத்து வேதனையுடன் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த படம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு விருந்து என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்து இன்றுடன் (சனிக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் சிறப்பு பூஜை செய்து ஓராண்டு சடங்குகளை நிறைவேற்ற தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக அங்கு பந்தல் போடப்பட்டுள்ளது.

பாடல்கள் மூலம் நினைவஞ்சலி

புனித் ராஜ்குமாருக்கு பாடல்கள் மூலம் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் கன்னட திரையுலகை சேர்ந்த பாடல் கலைஞர்கள் 100 பேர் நேற்று இரவு 12 மணிக்கு புனித் ராஜ்குமாரின் பாடல்களை பாடத்தொடங்கினர். அவர்கள் இன்று மதியம் 12 மணி வரை தொடர்ந்து பாடுகிறார்கள். இன்று அவரது ரசிகர்கள் ஏராளமானோர் வந்து நினைவஞ்சலி செலுத்த உள்ளனர். ரசிகர்கள் வரிசையாக வந்து செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்