புனித் ராஜ்குமார் நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை

சிக்கமகளூருவில் புனித் ராஜ்குமார் நடித்த ‘கந்ததகுடி’ ஆவணப்படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்ற சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-10-28 19:00 GMT

சிக்கமகளூரு;

தியேட்டர் முன்பு குவிந்தனர்

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். கடந்த ஆண்டு(2021) புனித் ராஜ்குமார் திடீரென உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இதனால் கன்னட திரைஉலகம் சோகத்தில் மூழ்கியது. இந்த நிலையில் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படம் நேற்று வெளியானது. கர்நாடகம் முழுவதும் அநேக திரையரங்குகளில் இந்த ஆவணப்படம் வெளியானது.

அதுபோல் சிக்கமகளூரு டவுனில் உள்ள நாகலட்சுமி திரையரங்கிலும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 5 மணி முதலே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். இதனால் இந்திரா காந்தி சாலை முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. மேலும் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு உருவானது. சிலர் முண்டியடித்துக் கொண்டு தியேட்டருக்குள் சென்றனர். தியேட்டரில் புனித் ராஜ்குமாரின் ஆவணப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். முதல் காட்சி 8 மணிக்கே திரையிடப்பட்டது.

ரசிகர்கள் பாராட்டு

கூட்டம் நிரம்பி வழிந்ததால் தியேட்டர் முன்பு 'ஹவுஸ்புல்' என போர்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒருசிலர் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் தியேட்டர் முன்பு நின்று கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்றனர். இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசாரிடமும் முறையிட்டனர். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் கள்ளத்தனமாக டிக்கெட் விற்றவர்கள் கடைசி வரை டிக்கெட்டுகளை விற்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சமூக ஆர்வலர் சந்து என்பவர், தனது தலையில் 'கந்ததகுடி' என்று எழுதிக்கொண்டு வந்தார். அவருக்கு புனித் ராஜ்குமார் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே சிக்கமகளூரு டவுனில் ஸ்ரீலேகா என்று ஒரு திரையரங்கம் உள்ளது. அந்த திரையரங்கில் 'காந்தாரா' என்ற கன்னட திரைப்படம் கடந்த ஒரு மாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த திரைப்படம் வசூலை குவித்து வரும் நிலையில், அந்த திரைப்படத்தின் டிக்கெட்டையும் சிலர் முன்பதிவு செய்து தியேட்டர் முன்பு நின்று கொண்டு கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்