புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் கட்டாயம்; புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதுடன் பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு அறிவித் துள்ளது.;

Update:2022-12-28 02:39 IST

உருமாறிய கொரோனா பரவல் அச்சுறுத்தி வருகிறது.

சீனாவில் கொரோனா பரவல்

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா காரணமாக தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையடுத்து, இந்தியா வில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்

புதுச்சேரி சுற்றுலா நகரம் என்பதால், இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து ஆங்கில புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இதற்காக புதுவையில் உள்ள ஓட்டல்களில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

அதன்படி, 2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதுச்சேரி விழா கோலம் பூண்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தலங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் மின்னொளியில் ஜொலிக்கிறது. ஓட்டல்களில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் புதுவை கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

முன் எச்சரிக்கை நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது புதுச்சேரி கடற்கரை மற்றும் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள். இதனால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கையாக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை

இந்தநிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, மக்கள் கூடும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்புக்குரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் தங்களின் அனைத்து ஊழியர்களும் முக கவசம் அணிவது மட்டுமல்லாது, 2 தவணை தடுப்பூசிகள் போட்டு இருக்கீறார்களா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

முக கவசம் கட்டாயம்

அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகள் படி செயல்பட வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு செல்லும்போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு உள்ளனரா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் கவலை

புத்தாண்டு கொண்டாட மக்கள் தயாராகி வந்த நிலையில், நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஓட்டல், பப், பார்களின் உரிமை யாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்