வேலையின் தன்மையை கருதி வங்கி தேர்வுமுறையை மாற்ற வேண்டும்நாடாளுமன்ற நிலைக்குழு சிபாரிசு
வேலையின் தன்மையை கருதி, வங்கி தேர்வு முறையை அவ்வப்போது மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
புதுடெல்லி,
பணியாளர் நலன், மக்கள் குறைதீ்ர்ப்பு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பா.ஜனதா எம்.பி. சுஷில்குமார் மோடி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இக்குழு 'இந்திய அரசு தேர்வாணையங்களின் செயல்பாடுகள் பற்றிய மறுஆய்வு' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட வங்கிப்பணி இப்போது பெரும் சுமையாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் எண்ணற்ற திட்டங்கள், ஏழைகளுக்கான திட்டங்கள் ஆகியவை வங்கிகள் மூலமாகவே நிறைவேற்றப்படுகின்றன.
வேகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்தால், ஆன்லைன் வங்கிக்கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன. ஜன்தன் வங்கிக்கணக்குகள் உள்பட ஏராளமான கணக்குகளுக்கு பணியாற்ற வேண்டி இருக்கிறது. எனவே, அந்த வங்கி ஊழியர்களுக்கு வேகமும், துல்லியத்தன்மையும் தேவைப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பணியாற்றுவதில் பொதுத்துறை வங்கிகள் மிக வேகமாகவும், துல்லியத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும்.
வங்கிப்பணியின் வேலைத்தன்மையை கருத்தில்கொண்டு, வங்கி ஆள்தேர்வு முறையையும், கேள்வித்தாள் வடிவமைப்பையும் அவ்வப்போது மாற்ற வேண்டும். அப்போதுதான், தேர்வு எழுதுபவர்களின் வேகத்தையும், துல்லியத்தன்மையையும் மதிப்பிட முடியும்.
வங்கி ஊழியர்களிடம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை கருதி, பாடத்திட்டத்தையும் அவ்வப்போது மாற்ற வேண்டும்.
தேர்வு கட்டணத்தைதிருப்பித்தர வேண்டும்
வங்கி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள்தான். சிலர் விண்ணப்பித்த போதிலும், தேர்வு எழுத வருவது இல்லை. அவர்களின் பொருளாதார நிலையை கருதி, அவர்களது தேர்வு கட்டணத்தை திருப்பித்தரும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
அதுபோல், தேர்வு எழுதுபவர்களில் 95 சதவீதம்பேர், வேலை கிடைக்காமல் தோல்வி அடைகின்றனர். அதனால் அவர்களது தேர்வு கட்டணத்தை பகுதி அளவுக்கு ஏற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி என்று வங்கி தேர்வாணையம் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்ாவறு அதில் கூறப்பட்டுள்ளது.